search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜலந்தர் பிராங்கோ முல்லக்கல்"

    கேரளாவில் கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜலந்தர் பிராங்கோ முல்லக்கல்லிடம் இன்று 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JalandharBishop #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம், குருவிலங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கொடுத்தார்.

    கோட்டயம் போலீசார் கன்னியாஸ்திரியின் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    போலீஸ் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து நேற்று திருப்புணித்துறா போலீஸ் நிலையத்தில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் நேரில் ஆஜரானார். பகல் 11 மணிக்கு போலீஸ் நிலையம் சென்ற அவரிடம் கோட்டயம் எஸ்.பி. ஹரிக்குமார், வைக்கம் டி.எஸ்.பி. சுபாஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் போலீசார் 150-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டனர். கன்னியாஸ்திரி தெரிவித்த புகார் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

    பகல் 11 மணிக்கு தொடங்கிய விசாரணை நேற்று மாலை 6 மணிக்கு முடிந்தது. சுமார் 7 மணி நேரம் நீடித்த விசாரணையில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் அளித்த பதில்களை போலீசார் பதிவு செய்தனர்.

    பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் நடத்தப்பட்ட விசாரணை பற்றி கோட்டயம் எஸ்.பி. ஹரிக்குமார் கூறும்போது, போலீசாரின் விசாரணைக்கு பி‌ஷப் ஒத்துழைப்பு அளித்தார். அவரின் பதில்களை பதிவு செய்துள்ளோம். இன்னும் பல கேள்விகள் கேட்க வேண்டியது உள்ளது. எனவே இன்றும் விசாரணை நடத்த உள்ளோம் என்றார்.

    அதன்படி இன்று 2-வது நாளாக போலீசார் முன்பு பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் ஆஜர் ஆனார். அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு பதில்களை போலீசார் பதிவு செய்தனர். அப்போது பி‌ஷப், கன்னியாஸ்திரி புகாரில் தனக்கு தொடர்பு இல்லை என கூறி சில ஆவணங்களை போலீசாரிடம் தாக்கல் செய்தார். அந்த ஆவணங்கள் மீது போலீசாருக்கு நம்பிக்கை இல்லை என தெரிகிறது. எனவே விசாரணை முடிவில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் கைது ஆக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

    பி‌ஷப் தரப்பில் ஏற்கனவே முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணையை கோர்ட்டு வருகிற 25-ந் தேதிக்கு தள்ளி வைத்தது. எனவே பி‌ஷப்பை போலீசார் இன்று கைது செய்வதில் தடை இருக்காது என்றும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரி மற்றும் உறவினர்கள் கொச்சி வாஞ்சி சதுக்கத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இன்று 13-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இப்போராட்டத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகள், மகளிர் இயக்கத்தினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இவர்களில் ஏ.ஐ.எப்.ஐ. அமைப்பினர் நேற்று பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் ஆஜரான திருப்புணித்துறா போலீஸ் நிலையம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  #JalandharBishop #FrancoMulakkal

    ×